கஸான், ஆக. 11 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ரஷ்யாவுக்கான ஆறு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தாயகம் புறப்பட்டார்.
பேரரசரின் சிறப்பு விமானம் காலை 11.08 மணிக்கு கஸான் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தாயகம் புறப்பட்டது. விமான நிலையத்தில் டாடர்ஸ்தான் குடியரசின் ரைஸ் ருஸ்தாம் மின்னிகனோவ் பேரரசரை வழியனுப்பி வைத்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில்
கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி மாமன்னர் இந்த அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார்.
பேரரசருக்கு ஆகஸ்டு 6 ஆம் தேதி மாஸ்கோ கிரெம்ளினில் அரசு வரவேற்பு விழா நடைபெற்றது. அதிபர் புடின் மாமன்னருக்கு அரசுமுறை வரவேற்பை நல்கினார். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, ரஷ்யாவை ஒரு நம்பகமான மற்றும் முக்கியமான பங்காளியாக மலேசியா
கருதுவதாக சுல்தான் இப்ராஹிம் கூறினார். மேலும் இந்த வருகை இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உண்மையான விருப்பத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நட்புணர்வுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் திசையை மக்களின் நலனுக்காக தொடர்ந்து வடிவமைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் கூறினார்.
மாஸ்கோவில் ரஷ்ய வாகன தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் மத்திய வாகன அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆட்டோமொடிவ் என்ஜின் நிறுவனத்தை (நாமி) மாமன்னர் பார்வையிட்டார்.
மாஸ்கோ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அரச வருகையின் இரண்டாவது பகுதியாக டாடர்ஸ்தானின் தலைநகரான கஸானுக்குப் புறப்பட்ட பேரரசர், கஸ்ன் கிரெம்ளின் அதிபர் மாளிகையில் மின்னிகனோவுடன் சந்திப்பு நடத்தினார்.
மலேசிய அரச அமைப்பு சார்ந்த தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசு பயணம் இதுவாகும்.
ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு பேரரசர் தாயகம் திரும்பினார்
11 ஆகஸ்ட் 2025, 1:52 AM