கப்பளா பாத்தாஸ், ஆக. 10- இங்குள்ள கடை ஒன்றின் எதிரே தேசியக் கொடியை ஆடவர் ஒருவர் தலைகீழாக பறக்கவிடப்பட்டச் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் புகார்தாரரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.
உள்நாட்டு ஆடவர் ஒருவர் மலேசியக் கொடியை தலைகீழாகப் பறக்கவிடுவதையும் அதனை மற்றொரு நபர் கைபேசியில் பதிவு செய்வதையும் சித்தரிக்கும் காணொளி ஒன்றைத் பேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு புகார்தாரர் கண்டதாக அவர் கூறினார்.
கப்பளா பாத்தாஸ் வட்டாரத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் அவ்வாடவர் கப்பளா பாத்தாஸ் போலீஸ் புகார் செய்தார் என அவர் தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பில் 1963ஆம் ஆண்டு சின்னம் மற்றும் பெயர் சட்டத்தின் (பெயர் முறையற்ற பயன்பாட்டுத் தடுப்பு) 5வது பிரிவு, 1955ஆம் ஆண்டு சிறுகுற்றச் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
உபகரண கடை ஒன்றின் எதிரே இரு ஆடவர்கள் வேண்டுமென்றே தேசிய தலைகீழாகப் பறக்கவிடுவதைச் சித்தரிக்கும் 21 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டனத்திற்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து அரசு சாரா அமைப்புகளோடு பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் நைனா மரிக்கானும் போலீசில் புகார் செய்தார்.