கிள்ளான், ஆக. 8- நில விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தெனாகா நேஷனல் நிறுவனத்திடமிருந்து மின் விநியோகம் பெறுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
மின் வசதி இல்லாத காரணத்தால் தமது தொகுதியில் உள்ள மூன்று ஆலயங்கள் உள்பட மாநிலத்தில் பல ஆலயங்கள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதோடு சில ஆலயங்கள் ஜெனரேட்டர்கள் அல்லது அருகிலுள்ள குடியிருப்புகள் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று மாநில அரசு தலைமைச் செயலகத்தில் மாநில ஆட்சிக்குழு குழு உறுப்பினரும் லீமாஸ் தலைவருமான இங் ஸீ ஹான் தலைமையில் நடைபெற்ற லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் கூட்டத்தில் தாம் இவ்விவகாரத்தை முன்வைத்ததாக அவர் கூறினார்.
மாநிலத்தில் இந்து ஆலயங்கள் மட்டுமன்றி சீன ஆலயங்களும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் இல்லாமல் இருக்கும் விஷயத்தை நான் லீமாஸ் செயல்குழுவின் இணைத் தலைவரான இங் ஸீ ஹான் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன்.
வழிபாட்டுத் தலங்கள் வர்த்தக மையங்கள் அல்ல. அங்கு பூஜைகள் உள்ளிட்ட நடவடிக்கைளுக்கும் பக்தர்களின் பயன்பாட்டிற்கும் மட்டுமே மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன.
முறையாக பதிவு செய்யப்படாத அல்லது அரசாங்க மற்றும் தனியார் நிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு ஊராட்சி மன்றங்கள் அங்கீகாரம் வழங்காத காரணத்தால் தெனாகா நேஷனல் மின் விநியோகம் வழங்குவதில்லை. எனினும், விண்ணப்பங்கள் செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ள ஆலயங்களுக்கு முடிவு தெரிய பல ஆண்டுகள் பிடிக்கும். அது வரை மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்பதான் தமது கோரிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நிலங்களைப் பெறுவதற்கு இன்னும் பல ஆலயங்கள் விண்ணப்பம் செய்யாமலிருப்பதை சுட்டிக்காட்டிய குணராஜ், சட்டமன்ற அலுவலகங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட நில அலுவலகங்கள் வாயிலாக உரிய ஆவணங்களும் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, மாநில அரசினால் வழங்கப்பட்ட நிலத்தில் உடனடியாக வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானப் பணிகளை தொடங்கும்படி சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை குணராஜ் கேட்டுக் கொண்டார்.
அரசினால் நிலங்கள் வழங்கப்பட்டும் கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக தொடங்கப்படாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.