சுக்காய், ஆகஸ்ட் 8: புக்கிட் அமானைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி போல் நடித்து நடத்தப்பட்ட இணைய மோசடியில் சிக்கிய பொறியாளர் ஒருவர் RM114,000 இழந்தார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி, 31 வயதான அந்நபருக்கு, வங்கி கணக்கு மோசடி கும்பலில் ஈடுபட்டதாகக் கூறி சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ராசி ரோஸ்லி
தெரிவித்தார்.
கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பணம் செலுத்துமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி, பீதியடைந்த பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் நான்கு வெவ்வேறு கணக்குகளுக்கு மொத்தம் RM114,000 மதிப்புள்ள பணம் செலுத்தியுள்ளார்.
“பின்னர், சந்தேக நபரைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று ரோஸ்லி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பெர்னாமா