ad

சுக்மாவில் சிலம்பம் நீக்கம் - நஜ்வான் கவனத்திற்கு  இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்றனர்

8 ஆகஸ்ட் 2025, 9:28 AM
சுக்மாவில் சிலம்பம் நீக்கம் - நஜ்வான் கவனத்திற்கு  இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்றனர்

கிள்ளான் அக். 8 - அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) சிலம்பத்தைப் பதக்க விளையாட்டு பட்டியலிலிருந்து விலக்கும் முடிவினால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில்
தாம் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் மற்றும் கோத்தா கெமுனிங் உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியுடன் சந்திப்பு நடத்தியதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.

சுக்மா போட்டியில் சிலம்பம் விடுபட்ட விவகாரத்தை இன்று நடைபெறும் மாநில ஆட்சிக்குழு
கூட்டத்தில் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நஜ்வான் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று மாலை 5.00 மணிக்கு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பில்  சாதகமான முடிவை நஜ்வான் அறிவிப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக குணராஜ் கூறினார்.

அடுத்தாண்டு சிலாங்கூர் ஏற்று நடத்தவிருக்கும் 2026 சுக்மா போட்டியில் பங்கேற்கும் எதிர்பார்ப்புடன் சிலம்பப் போட்டியாளர்கள்
கடுமையானப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுக்மா  போட்டியில் சிலம்பம் விலக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ நேற்று கூறியிருந்தது போல் சுக்மாவை ஏற்பாடு செய்யும் மாநிலம் என்ற முறையில் சிலம்பத்தை சேர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. ஆகவே. அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் மந்திரி புசார் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம் என குணராஜ்
தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.