புத்ராஜெயா, ஆக. 8 - டிக்டாக் செயலி கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கம் குறித்த விசாரணையில் சாட்சியாக வாக்குமூலம் வழங்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ மொஹிடின் யாசினைத் தொடர்பு கொண்டுள்ளது.
ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியம் தொடர்பான கருத்துடன் அந்த முன்னாள் பிரதமரை தொடர்புப்படுத்தும் காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதை இந்த விசாரணை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அது கூறியது.
வெளியிடப்பட்ட காணொளியின் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதே விசாரணையின் நோக்கமாகும். மேலும் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் அல்லது வழக்குப் பதிவுகளும் இதில் இல்லை என்று எம்.சி.எம்.சி. ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
தேவைப்பட்டால் தொடர்புடைய எந்தவொரு நபரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.
அனைத்து தரப்பினரும் ஊகங்களைத் தவிர்க்கவும் நடந்து கொண்டிருக்கும் விசாரணை விவேகமாகவும் தொழில் ரீதியாகவும் தொடரவும் அனுமதிக்கும்படி எம்.சி.எம்.சி. வலியுறுத்தியது.