ஷா ஆலம், ஆக. 7- அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) சிலம்பத்தைப் பதக்க விளையாட்டு பட்டியலிலிருந்து விலக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் மடாணி அரசாங்கத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சிலம்பம் வெறும் விளையாட்டாக மட்டுமல்ல மலேசியர்களின், குறிப்பாக இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை, வரலாறு மற்றும் அடையாளத்தின் வலிமையை பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார பாரம்பரியமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாப்பதும் நிலை நிறுத்துவதும் மடாணி அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கிய கொள்கைகளின் உண்மையான வெளிப்பாடாகும் என சிலாங்கூர் மந்திரி புசாரின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
சரவாக் மாநிலத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றது. அங்கு இந்த விளையாட்டு அமோக வரவேற்பைப் பெற்றதோடு திடமான போட்டி அமைப்பு மற்றும் தடகள வீரர் பங்கேற்பை கொண்டுள்ளது என்பதையும் நிரூபித்தது. இந்த வெற்றியை ஒரு குறிப்பாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர புறக்கணிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
சுக்மா 2026 போட்டியிலிருந்து சிலம்பத்தை விலக்கியது ஏமாற்றமளிக்கும் நடவடிக்கையாகும். அரசின் இந்த முடிவு சிலம்பம் விளையாட்டில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ள இளைய தலைமுறையினருக்கு தவறான சமிக்ஞையை அனுப்பக்கூடும். மேலும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் மூலம் அடிமட்ட விளையாட்டுகளை கட்டிக்காப்பதற்கும் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முரணாகவும் அமையும்.
ஆகவே, இந்த முடிவை நியாயமான முறையிலும் விரிவாகவும் மறுபரிசீலனை செய்வதற்காக மலேசிய சிலம்பக் கழகம், மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு சந்திப்பு நிகழ்வை
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ உடனடியாக நடத்த வேண்டும்.
விளையாட்டின் நலனுக்காக மட்டுமல்லாமல் இந்நாட்டின் வலிமையின் தூணாக இருக்கும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாராட்டவும் பாதுகாக்கவும் சுக்மா 2026 போட்டியில் சிலம்பத்திற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.
சிலம்பம் தொடர்ந்து தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதையும் இளைஞர் மேம்பாடு, பாரம்பரியம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஒரு தளமாக இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக உள்ளோம் என குணராஜ் அந்த அறிக்கையில் கூறினார்.
சுக்மா பதக்க விளையாட்டு பட்டியலிலிருந்து சிலம்பம் நீக்கம் - முடிவை மறுபரிசீலனை செய்ய குணராஜ் கோரிக்கை
7 ஆகஸ்ட் 2025, 9:16 AM