ஜெலுபு, ஆக. 7- பகாவ், ஜாலான் ரொம்பின் 25வது கிலோ மீட்டரில் சாலையோரம் தனது ஆறு வயது மகனைப் படுகொலை செய்ததாக அவனது தந்தை மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன்னிலையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக 36 வயதான எம்.அருண்குமார் தலையை அசைத்தார்.
கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி காலை 9.02 மணிக்கும் பிற்பகல் 12.55 மணிக்கும் இடையே, ஜாலான் ரொம்பின் 25வது கிலோ மீட்டரில் சாலையோரம் தனது மகனைப் படுகொலை செய்ததாக இ-ஹெய்லிங் ஓட்டுநரான அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது நாற்பது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் கூடுதல் பட்சம் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
சவப்பரிசோதனை, இரசாயன, தடயவியல் மற்றும் டி.என்.ஏ. அறிக்கைகளைப் பெறுவற்கு ஏதுவாக இந்த வழக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கும்படி அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ரஸ்யிடா மூர்னி அட்ஸ்மி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கின் மறுவிசாரணை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் தேதி சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் செவிமடுப்பதற்கு மாஜிஸ்திரேட் தேதி நிர்ணயித்தார்.
ஜோகூர், இஸ்கந்தார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் தனது மகன் காணாமல் போனதாக அந்த ஆடவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி போலீசில் புகார் செய்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ரொம்பின், ஜெம்புல் வட்டாரத்தில் அந்த சிறுவனின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கடந்த மாதம் 28ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது.