மாஸ்கோ, ஆக. 7 - பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் தொடர்ச்சியான தகவல் தொடர்புகள் வாயிலாக மாஸ்கோவிற்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான உறவுகள் நல்ல நிலையில் இருந்து வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் நடத்திய சந்திப்பின் போது புடின் இதனைத் தெரிவித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கிரெம்ளினில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரது பேராளர் குழுவை புடின் அன்புடன் வரவேற்றார். இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஆறுபது ஆண்டுகளாக அரசதந்திர உறவுகளை பேணிக்காத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கலந்துரையாடல் நல்ல கட்டத்தில் உள்ளது. நாங்கள் அரசு மற்றும் நாடாளுமன்ற நிலைகளில் தொடர்பு கொள்வதோடு எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்.
நான் சொன்னது போல் நாங்கள் பல்வேறு நிலைகள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அரசாங்கத் தலைவர்கள் நமது நாட்டிற்கு வருகை தருகிறார்கள். அவர்களுடன் எனக்கும் நல்ல உறவுகள் உள்ளன என்று புடின் கூறினார்.
ரஷ்யா-இஸ்லாமிய உலக வியூக மேம்பாட்டுக் குழுவில் மலேசியாவின் பங்கையும் ரஷ்ய அதிபர் பாராட்டினார். இது ரஷ்யாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான ஒரு பயனுள்ள கருவியாகவும் பரஸ்பர புரிதலுக்கான தளமாகவும் விளங்குகிறது என அவர் விவரித்தார்.
மலேசியாவுக்கு மூன்று முறை பயணம் மேற்கொண்டதாகவும் அந்தப் பயணம் குறித்த இனிமையான நினைவுகள் மனதில் பசுமையுடன் இருப்பதாகவும் புதின் தெரிவித்தார்.
அசாதாரண இயற்கை அழகைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. நாங்கள் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்கப்பட்டோம். துவாங்குவின் நாட்டிற்குச் சென்ற நானும் தூதுக்குழுவும் அதை எப்போதும் மிகுந்த நன்றியுடன் நினைவில் கொள்கிறோம் என்றார் அவர்.
சுல்தான் இப்ராஹிமின் ரஷ்யா வருகை அர்த்தமுள்ள பலன்களைத் தரும் என நம்புவதாக புடின் மேலும் தெரிவித்தார்.