ஷா ஆலம், ஆக. 7- கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி கிள்ளான், பண்டார் செந்தோசாவில் ஆடவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு இரு பெண்கள் உள்பட ஏழு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி புகார் கிடைத்ததைத் தொடர்ந்து 20 முதல் 34 வயது வரையிலான அந்த எழுவரும் கிள்ளான் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமலாரிஃபின் அமான் ஷா கூறினார்.
பண்டார் செந்தோசா, லோரோங் லக்ஸ்மணா 20இல் உள்ள கடை வீடொன்றில் நிகழ்ந்த அந்த படுகொலை தொடர்பான தகவல்களை அம்மாது போலீசாரிடம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
அந்நிய பிரஜையான அந்த 28 வயது ஆடவரை அந்த வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் உடம்பிலும் கழுத்திலும் கத்தியால் குத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட நபருக்கும் சந்தேகப் பேர்வழிக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட கைலப்பில் அந்நபர் கொல்லப்பட்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
பின்னர் அந்த வீட்டிலிருந்து ஆறு நபர்களும் இறந்தவரின் உடலை குப்பை அழிப்பு மையத்திற்கு கொண்டுச் சென்று புதைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
கைதான சந்தேக நபர்கள் கொடுத்த தகவலின் பேரில் இறந்த ஆடவரின் சடலத்தை மீட்ட போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியையும் கைப்பற்றினர்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழும் உடலை மறைத்த குற்றத்திற்காக இதர நால்வர் மீது தண்டனைச் சட்டத்தின் 201வது பிரிவின் கீழும் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்றார் அவர்.