ஷா ஆலம், ஆக. 7 - ரோன்95 இலக்கு மானிய விவகாரத்தில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ மொஹிடின் யாசின் அளித்த மறுப்பு அறிக்கை குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி ) விசாரணை நடத்தி வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடப்புச் சட்ட விதிகளின்படி இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அந்த ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாகோ நாடாளுமன்ற உறுப்பினரின் மறுப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் அலுவலகத்தின் ஊடக அறிக்கையை எம்.சி.எம்.சி. கவனத்தில் கொண்டுள்ளது.
எந்தவொரு நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கத்தையும் பரப்புவதற்கு சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று எம்.சி.எம்.சி பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது என்று அந்த ஆணையம் தெரிவித்தது.
எரிபொருள் மானியத்தை வெளிநாட்டினர் அனுபவிக்கும் உரிமையை எதிர்க்கட்சி பிரதிநிதி ஒருவர் பாதுகாப்பதாகக் கூறும் ஓர் அறிக்கை தனக்குக் கிடைத்ததாக நேற்று முன்தினம் மக்களவைக் கூட்டத் தொடரின் போது அன்வார் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதன் தொடர்பான எந்த அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என்றும்
இலக்கு மானிய பிரச்சினையில் பெரிக்காத்தான் நேஷனல் நிலைப்பாடு எப்போதும் நிலையானது என்றும் மொஹிடின் ஓர் அறிக்கையில் விளக்கினார்.
மானியங்களை செயல்படுத்தும் போது மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பெரிக்கத்தான் நேஷனல் நீண்ட காலமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்
ரோன்95 விவகாரம்- மொஹிடினின் மறுப்பு அறிக்கை மீது எம்.சி.எம்.சி. விசாரணை
7 ஆகஸ்ட் 2025, 2:10 AM