பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 — பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சிலாங்கூர் நுண்ணறிவு பார்க்கிங் (SIP) முறையை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.
வருவாய், இலாபப் பகிர்வு மற்றும் அமலாக்கப் பணியாளர்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகப் பெட்டாலிங் ஜெயா மேயர் முகமது ஜஹ்ரி சாமிங்கோன் தெரிவித்தார்.
“ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு பல விஷயங்களை ஆராய வேண்டும். இலாபம் மற்றும் இரண்டாம் நிலை அமலாக்கப் பணியாளர்கள் தொடர்பான சில விஷயங்கள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
“எம்பிஐ மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் (டத்தோ’ இங் சூயி லிம்) மூலம் மாநில அரசாங்கத்துடன் அமர்வுகளையும் நடத்தியுள்ளோம்,” என்று அவர் பிளேஸ்மேக்கர் வீக் ஆசியான் 2025 தொடக்க விழாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி சுபாங் ஜெயா மாநகராட்சி, ஷா ஆலம் மாநகராட்சி மற்றும் செலாயாங் நகராண்மை கழகம் ஆகிய மூன்று பிபிடிகளில் சிலாங்கூர் நுண்ணறிவு பார்க்கிங் முறை செயல்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.