கிள்ளான், ஆக. 6 - இங்குள்ள ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் தொடர்பில் டபள்யூ.சி.டி. டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளியின் மேலாளர் வாரியம் ஆகிய தரப்பினருடன் குணராஜ் நேற்று சந்திப்பு பள்ளியில் நடத்தினர்.
ஹைலண்ட்ஸ் பள்ளி நிர்வாகம் மற்றும் மேலாளர் வாரியத்தின் கோரிக்கையின் அடிப்படையில் பிரத்தியேக கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டம் குறித்து தாம் ஆய்வினை மேற்கொண்டதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் ஏற்படும் ஏற்படக்கூடிய கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையின் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இதனிடையே, பள்ளி வளாகத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக அருகிலுள்ள தெனாகா நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் பிரத்தியேக கார் நிறுத்துமிடத்தை அமைப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் குறித்து தாங்கள் இச்சந்திப்பில் விவாதித்ததாக பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் மகேந்திரன் வரதன் கூறினார்.
சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டபடி அடுத்தக் கூட்டத்தில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டு பள்ளிக்கு பிரத்தியேக கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சொன்னார்.
சுமார் 1,200 மாணவர்கள் பயிலும் இப்பள்ளி கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியில் பரபரப்புமிக்க வர்த்தக மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
ஆகவே, விபத்துகளைத் தவிர்க்கவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரத்தியேக கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்துவதில் பள்ளியின் மேலாளர் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.