ad

காப்பாரில் கழிவுநீர் குளத்திற்கு அருகில் ஆலயத்திற்கு நிலம் - மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாப்பாராய்டு கண்டனம்

6 ஆகஸ்ட் 2025, 7:48 AM
காப்பாரில் கழிவுநீர் குளத்திற்கு அருகில் ஆலயத்திற்கு நிலம் - மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாப்பாராய்டு கண்டனம்

ஷா ஆலம், ஆக. 6 - காப்பாரில் தோட்ட ஆலயத்தை கழிவுநீர்க் குளத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மாற்றுவதற்கு தோட்ட நிறுவனம் செய்துள்ள பரிந்துரையை மனித வளம்  மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய தோட்டப் பாட்டாளிகளின் தன்மானத்திற்கு இழுக்கையும் அவமரியதையையும் ஏற்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது என்று பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் (லீமாஸ்) தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

இதே போன்றச் சம்பவம் கிள்ளான், புக்கிட் ராஜாவில் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வழிபாட்டுத் தலங்களுக்கு நிலங்களை ஒதுக்குவதில் அலட்சியமும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கும் மேம்பாட்டாளரின் பொறுப்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகவும் மடாணி அரசாங்கத்தால் போற்றிக் காக்கப்படும் சமூக நீதிக்கு முரணாகவும் உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள் என்பது இனத்தின் அடையாளமாகவும் ஆன்மீகத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறன. அவை வெறும் கட்டிடங்கள் அல்ல. மாறாக, சமூகத்தின் இறை நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சுபிட்சத்தின் அடையாளமாகும். பொருத்தமற்ற இடங்களில் ஆலயத்திற்கு நிலம் வழங்குவது மனித உரிமையை மீறும் செயலாகவும் பெரு நிறுவனங்களின் தன் மூப்பான போக்கையும் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

இது நாள் வரை மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கி வரும் தோட்டப் பாட்டாளிகளின் உரிமை, சமூக நலன் மற்றும் கௌரவத்திற்காக குரல் கொடுக்கும் உரிமை லீமாஸ் தலைவர் என்ற முறையிலும் தனிவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு உள்ளது.

தோட்டப் பாட்டாளிகள் தோட்ட மற்றும் மூலப்பொருள் உற்பத்தித் துறைகளுக்கு பங்களிக்கும் வெறும் தொழிலாளர்களாக மட்டும் விளங்கவில்லை. மாறாக, தலைமுறையின் உருவாக்கத்திற்கும் பெரு நிறுவனங்களின் வெற்றிக்கும் கால காலமாக தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதில் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் சமூகத்திற்கு தார்மீக பொறுப்பும் சமூக கடப்பாடும் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்களும் திட்டமிடல் துறையும் மேம்பாட்டாளர்களின் நெருக்குதலுக்கு அடிபணியாமல் சமூகத்தின் தேவைகளை பொறுப்புணர்வுடனும் கவனத்துடனும் பரிசீலிக்க வேண்டும் என்று பாப்பாராய்டு அந்த அறிக்கையில் வலியுறுத்தினார்.


அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.