புதுடில்லி, ஆக. 6 - இந்தியாவும் பிலிப்பைன்ஸும் இருதரப்பு உறவுகளை விவேகப் பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தியுள்ளன. பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேற்று புதுடில்லிக்கு மேற்கொண்டப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட ஒரு புதிய மைல்கல் அறிவிப்பாகும்.
பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் இந்தோ-பசிபிக் விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மார்கோஸுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் அனைத்துலக ஒத்துழைப்புக்கான முழு வாய்ப்புகளையும் உணர்ந்து கொள்வதற்கான ஒரு புதிய அத்தியாயத்தை இந்த விவேக பங்காளித்துவம் குறிக்கிறது என்று இரு தலைவர்களும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
இராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கவும் பாதுகாப்பு உற்பத்தியில் ஒத்துழைக்கவும் கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
கடந்த 2024-2025 நிதியாண்டில் எட்டப்பட்ட சுமார் 330 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு தரப்பு வர்த்தகத்தை கணிசமாக அதிரிப்பதற்கான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மார்கோஸ் தனது துணைவியார் லூயிஸ் அரனெட்டா மற்றும் உயர்மட்டக் குழுவுடன் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு நேற்று இந்தியா வந்தார்.