இஸ்தான்புல், ஆக. 6 - கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் காஸா தீபகற்பத்தில் இஸ்ரேல் தொடங்கிய இனப்படுகொலை தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 61,020 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பட்டினியின் காரணமாக உயிரிழந்த 188 பேரும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தாக்குதல்களில் பலியான 87 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் 644 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
இதனுடன் சேர்த்து இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 150,671 பேராக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் பட்டினி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இதன் வழி கடந்த 2023 அக்டோபர்
முதல் பட்டினியால் பலியானோர் எண்ணிக்கை 94 சிறார்கள் உட்பட 188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 352 பேர் காயமடைந்தனர். கடந்த மே மாதம் 27 முதல் 11,230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அது கூறியது
இஸ்ரேலின் போரினால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் காரணமாக காஸாவில் சிறார்கள் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகளவில் இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியகம் (யுனிசெஃப்) கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின்படி காஸாவில் நான்கு பாலஸ்தீனர்களில் ஒருவர் இப்போது பட்டினி நிலைமையை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் 100,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் இதுவரை 61,000 பாலஸ்தீனர்கள் பலி
6 ஆகஸ்ட் 2025, 3:03 AM