கோத்தா பாரு, ஆக. 6 - கோல கிராய், ஸ்ரீ குச்சில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்று மாலை மூதாட்டியின் உடல் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை அதிகாரிகள் பிற்பகல் 2.08 மணிக்கு திறந்தபோது வரவேற்புக்கூடத்தில் 69 வயதான அம்மூதாட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கோல கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் கைருல் துஹா அப்துல் ஹலீம் கூறினார்.
அவ்வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து வீட்டின் கதவைத் திறக்க தீயணைப்பு படையின் உதவி கோரி காவல் துறையிடமிருந்து பிற்பகல் 2.04 மணிக்கு தனது தரப்பினருக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
நாங்கள் அந்த இடத்திற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதையும் துர்நாற்றம் வீசுவதையும் கண்டோம்.
கதவு வெற்றிகரமாகத் திறக்கப்பட்ட பின்னர் வரவேற்புக்கூடத்தில் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் மூதாட்டி இறந்து கிடப்பதை உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் ஆறு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாகக் கூறிய அவர், பிற்பகல் 2.18 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது என்றார்.
அம்மூதாட்டியின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.