ஷா ஆலம், ஆக. 6 - அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பெண் விளையாட்டாளர்களின் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான பல முக்கியமான முடிவுகளை சுக்மா உச்சமன்றச் செயல்குழு நேற்று இறுதி செய்தது.
சரவாக்கில் நடைபெற்ற 2024 சுக்மா போட்டியில் பெண் விளையாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இடம்பெறாதது தொடர்பான பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
ஒவ்வொரு மாநிலப் பிரிவிலும் பெண் குழுவுக்கு குறைந்தபட்சம் ஒரு தலைவர் அல்லது துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் மற்றும் குழுப் பிரிவு நிர்வாகம், மருத்துவ சேவையில் பெண் ஆதரவு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஒதுக்கீட்டை 20 விழுக்காடாக அமல்படுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
குறைந்தபட்சம் 30 சதவீத பெண் தன்னார்வலர்கள் மற்றும் 20 சதவீத பெண் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்பதற்கான இலக்கு அடையப்படுவதும் உடல் பரிசோதனை தேவைப்படும் ஒவ்வொரு பெண் குழு அல்லது நிகழ்விலும் குறைந்தது ஒரு பெண் பணியாளரையாவது பதிவு செய்வதும் அவசியம் என்று அவர் கூறினார்.
செத்தியா ஆலமில் நேற்று நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இவ்வாண்டு மூன்று மகளிர் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சிகளும் வரும் 2026ஆம் ஆண்டிற்குள் மேலும் ஐந்து பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஹன்னா மேலும் தெரிவித்தார்.
பொது நிலைப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலின விளையாட்டாளர்களும் பங்கேற்பது கட்டாயமாகும். சுக்மா சிலாங்கூர் 2026 பெண்களுக்கு மிகவும் உகந்தத போட்டியாக இருக்கும். தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் மாற்றங்களுடன் இது ஒரு பெரிய திருப்பம் கொண்டதாக விளங்கும் என்று அவர் கூறினார்.