சிரம்பான், ஆகஸ்ட் 5 — செப்டம்பர் 2022இல் நடந்த நில விற்பனையிலிருந்து RM3.8 மில்லியனைப் பெறுவதற்காக போலி தகவல்களைக் கொண்ட நில உரிமையைப் பயன்படுத்தியதன் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இன்று முதல் ஏழு நாட்களுக்கு நில தரகர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) நெகிரி செம்பிலான் கிளை, காவலில் வைத்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் சைஃபுல் சயோதி, நீதிமன்றத்தில் தடுப்பு உத்தரவை பிறப்பித்தார்.
40 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை 5.30 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க தானாக முன்வந்து ஆஜரான பிறகு கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர், பரிவர்த்தனையை எளிதாக்க, மற்றொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு போலி நில உரிமை ஆவணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நெகிரி செம்பிலான் எம்ஏசிசி இயக்குநர் அவ்கோக் அஹ்மட் தௌபிக் புத்ரா அவ்க் இஸ்மாயில் அந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009இன் பிரிவு 18இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.