ஷா ஆலம், ஆக. 5 - இந்து சமய சடங்குகளில் முக்கிய அங்கமாக விளங்குவது மலர் மாலைகளாகும். சுப நிகழ்வுகள் தொடங்கி துக்க காரியங்கள் வரை அனைத்திலும் இந்த மாலைகளுக்கு தவிர்க்க முடியாத இடம் நிச்சயம் உண்டு.
மாலைகள் சமயத்தின் ஒரு அங்கமாக மட்டுமின்றி நமது பலரை வாழ வைக்கும் வலுவான பொருளாதார சக்தியாகவும் கருதப்படுகிறது.
இத்தகைய மாலைகளைத் தொடுப்பது தனிக்கலை. இக்கலையை மகளிருக்கு பயிற்றுவிக்கும் நிகழ்வினை பத்தாங் காலி மற்றும் கோல குபு பாரு இந்திய சமூகத் தலைவர்களான குணாளன் முனுசாமி மற்றும் திருமதி தங்கேஸ்வரி ஆகியோர் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
பத்தாங் காலி, தாமு ஹில் பார்க்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் பயிற்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 30 மகளிர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியை கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாங், பகுதி நேரத் தொழிலில் ஈடுபட்டு உபரி வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பினை இத்தகைய பயிற்சிகள் மகளிருக்கு வழங்கும் என கூறினார்.
வட்டார மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வரும் இந்திய சமூகத் தலைவர்களான குணாளன் முனுசாரி, தங்கேஸ்வரி மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ராஜேஸ் ராவ் ஆகியோரை அவர் பெரிதும் பாராட்டினார்.
இந்த வட்டாரத்தில் இந்தியர்களின் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கும், மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக பத்தாங் காலியில் உள்ள வாவாசான் மண்டபத்தை இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயன்படுத்துவதற்கு தாம் ஏற்பாடு செய்து தருவதாக அவர் வாக்குறுதியளித்தார்.
இதனிடையே, இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்கும் வகையில் மாலை தொடுக்கும் போட்டியை தாங்கள தீபாவளியின் போது நடத்தவுள்ளதாக தங்கேஸ்வரி தெரிவித்தார்.
பெண்கள் கைத்தொழிலைக் கற்று சுயமாக தொழில்புரிந்து உபரி வருமானம் ஈட்ட உதவும் நோக்கில் தாங்கள் நடத்திய இந்த நிகழ்வுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.