ஷா ஆலம், ஆக. 5 - மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு.பி.எம்.) விதிகளை மீறி மரத்தில் மோதி ஆசிரியர் மற்றும் மூன்று சிறார்களுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு வார சிறைத்தண்டனையும் 8,000 வெள்ளி அபராதமும் விதித்தது.
மாஜிஸ்திரேட் நூர் நடாஸ்யா மொக்தாருடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து 44 வயதான முகமது ஹமிர் மஸ்ருடினுக்கு
இத்தண்டனை வழங்கப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் ஓட்டுநர் உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சாலையின் நிலை மற்றும் போக்குவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக முகமது ஹமீர் மீது
குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் 12.18 மணிக்கு யு.பி.எம். ஜாலான் பெர்சியாரனில் இக்குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,000 முதல் 15,000 வெள்ளி வரை அபராதம், ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையின் போது வழக்கறிஞர் இன்றி சொந்தமாக வாதாடிய முகமது ஹமீர், தனக்கு நிரந்தர வேலை இல்லாததோடு கிராமத்தில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது தாயாரைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் தண்டனையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனத்தை செலுத்தி நால்வரை காயப்படுத்தியதால் அவருக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நூராய்ன் ஷாபிகீன் முகமது ரோஸி கோரினார்.
மரத்தை பேருந்து ஓட்டுநருக்கு ஒரு வாரச் சிறை, வெ.8,000 அபராதம்
5 ஆகஸ்ட் 2025, 9:37 AM