கோலாலம்பூர், ஆக. 5 - இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி நேற்று வரை சிலாங்கூரில் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (அத்திஸ்போம்) கீழ் மேற்கொள்ளப்பட்ட 10 சோதனைகளில் தேக்கோங் டாராட் எனப்படும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் முக்கிய புள்ளிகளாகச் செயல்பட்டு வந்த எட்டு உள்நாட்டினர் உள்பட 15 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் காலகட்டத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஏழு தேக்கோங் டாராட் மற்றும் 224 சட்டவிரோதக் குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டதாக பொது நடவடிக்கைப் படை (பி ஜி.ஏ.) மத்திய படைப்பிரிவுத் தளபதி எஸ் ஏ.சி. ஹக்கிமால் ஹவாரி தெரிவித்தார்.
கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 22ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் பி ஜி.ஏ. உறுப்பினர்கள் 10.355 கிலோகிராம் எடையுள்ள ஷாபு என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளையும் 3.6 கிலோகிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகளையும் மொத்தம் 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வாகனங்களையும் கைப்பற்றினர் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
குறிப்பாக, சிலாங்கூர் கடற்கரை மற்றும் ஜோகூரின் மேற்கு கடற்கரையை ஒட்டிய மலேசிய கடல் பகுதியில் கடத்தல் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதில் பல்வேறு வியூக அணுகுமுறைகள் கையாண்டதன் விளைவாக இந்த கைது மற்றும் பறிமுதல் சாத்தியமானதாக அவர் கூறினார்.
இதே காலகட்டத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 288 சோதனைகள் நடத்தப்பட்டதாக ஹக்கிமால் குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் விளைவாக 1,005 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 110 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பி.ஜி.ஏ. அதிரடிச் சோதனை- ஜனவரி முதல் 15 கடத்தல் நபர்கள் கைது
5 ஆகஸ்ட் 2025, 4:24 AM