கோலாலம்பூர், ஆக. 5 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப ரோன்95 இலக்கு மானியம் அமலாக்கம் மீதான விரிவான திட்டங்கள் அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலக்கு மானியம் அமல்படுத்தப்பட்டவுடன் அதன் செயலாக்கம் சீராக இருப்பது உறுதி செய்ய மானிய இலக்கு செயல்முறையை அரசாங்கம் உருவாக்கி சோதித்து வருவதாக நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் நிதியமைச்சு தெரிவித்தது.
தேசிய பதிவுத் துறை, சாலைப் போக்குவரத்துத் இலாகா மற்றும் புள்ளிவிவரத் துறை போன்ற அரசு நிறுவனங்களின் தரவுகளைச் செம்மைப்படுத்துவதும் இதில் அடங்கும் என்றும் அமைச்சு கூறியது.
ரோன் 95 மானியம் இலக்கிடப்பட்டத் தரப்பினரைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இன்னும் விரிவான அணுகுமுறையை பின்பற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
பொருளாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட மானிய அமலாக்கம், குறிப்பாக முன்-முனை மற்றும் பின்-முனை கட்டங்கள் குறித்து உலு லங்காட் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் முகமட் சானி ஹம்சான் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
மறு இலக்கு மானிய வழிமுறை செயல்படுத்தப்பட்டப் பின்னர் தகுதியுள்ள மலேசியர்கள் தங்கள் மைகார்ட் மூலம் லிட்டருக்கு வெ.1.99 என்ற விலையில் ரோன்95 பெட்ரோலை பெற இயலும்.
குடிமக்கள் அல்லாதவர்களும் மானியத்திற்கு தகுதியற்றவர்களும் மானிய சலுகைக்கு தகுதி பெறாதவர்களும் மானியம் இல்லாத தொகையில் பெட்ரோலை வாங்க வேண்டும்.
ரோன்95 இலக்கு மானியத் திட்டம் செப்டம்பர் இறுதியில் வெளியிடப்படும்
5 ஆகஸ்ட் 2025, 4:11 AM