சிபு, ஆக. 5 - இங்குள்ள ஜாலான் பெடாடாவில் கழிவுநீர் அமைப்பில் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததாக நம்பப்படும் இரண்டு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அக்குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மலேசிய சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.29 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சிபு சென்ட்ரல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 10 பேர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வாகனத்தில் நான்கு நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்ததாக அவர் கூறினார்.
தனது மகனைக் காணவில்லை என்றும் கழிவுநீர் அமைப்பு குழிக்குள் விழுந்திருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் சம்பவ இடத்திலிருந்த குழந்தையின் தந்தை மீட்புக் குழுவினரிடம் தெரிவித்தார்.
உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாலை 6.55 மணியளவில் அக்குழந்தை கழிவு நீர்க்குழியில் கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே கொண்டு வரப்பட்டு நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.