புத்ரஜெயா, ஆக. 5 - தகவல் துறையின் (ஜெபென்) ஊடக அங்கீகார அட்டை வைத்திருக்கும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் ஏர் ஆசியா விமான டிக்கெட்டுகளுக்கான 50 சதவீத தள்ளுபடி தொகையைப் பெற ஒரு தனித்துவமான ஊக்குவிப்புக் குறியீட்டைப் பெற வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் ஜெபெனுக்கு அனுப்புவதன் வழி ஊக்குவிப்பு குறியீடுகளைப் பெறலாம் என அத்துறை வெளியிட்டுள்ள வழக்கமான கேள்வி பதில் பதிவில் குறிப்பிட்டுள்ளது
ஊக்குவிப்பு குறியீட்டைப் பெற்ற பிறகு ஊடக அங்கீகார அட்டை வைத்திருப்பவர்கள் www.airasia.com அகப்பக்கத்தை பார்வையிடலாம் அல்லது பட்டியலிடப்பட்ட 56 ஆசியான் இடங்களுக்கு அனைத்துலக டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்ய ஏர் ஆசியா செயலியைத் திறக்கலாம்.
அடிப்படைக் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடியைப் பெற பணம் செலுத்தும்போது பெறப்பட்ட குறியீட்டை ஊக்குவிப்பு குறியீடு பக்கத்தில் உள்ளிட வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு ஊக்குவிப்பு குறியீடு மூன்று வேலை நாட்களுக்குள் அனுப்பப்படும் என்று அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து கொண்ட அங்கீகார அட்டை வைத்திருக்கும் மலேசிய குடிமக்கள் இந்த கட்டணக் கழிவைப் பெற தகுதி உள்ளவர்களாவர்.
முதல் 12,000 இருக்கைகளுக்கு மட்டுமே இந்த ஊக்குவிப்புச் சலுகை வழங்கப்படும் என ஜெபென் தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் தவிர 2026 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 6 வரையிலான விமான பயண காலத்திற்கான முன்பதிவு எதிர்வரும் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும்.
கூடுதல் தகவல் தேவைப்படும் ஊடகவியலாளர்கள் ஜெபென் பணியாளர்களை 03-8911 7381 அல்லது 03-8911 7382 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் emedia.penerangan.gov.my அகப்பக்கத்தில் தகவலைப் புதுப்பிக்கலாம்.