காஸா, ஆக. 4- இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 75 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா பொதுப் பாதுகாப்புத் துறையை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தென் காஸாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் வடக்குப் பகுதியான ராஃபாவில் 28 பேர் கொல்லப்பட்டதாக பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மாமுட் பாசல் தெரிவித்தார்.
அவர்களில் 23 பேர் அமெரிக்காவால் நடத்தப்படும் உதவி விநியோக மையத்திற்கு அருகில் பலியாகினர். அதே நேரத்தில் அகதிகளை தங்க வைத்திருந்த பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
வட காஸாவின் பெய்ட் லாஹியாவின் வடமேற்கே உள்ள ஜிகிம் கணவாய் அருகே உதவி பொருள்களுக்குக் காத்திருந்த குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 198 பேர் காயமடைந்தனர்.
மத்திய காஸாவில் நெட்சாரிம் கிராசிங்கில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேலிய துருப்புக்கள் பாலஸ்தீனர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
கான் யூனிஸில் உள்ள செம்பிறை சங்க கட்டிடத்தின் மீதான தாக்குதலில் ஒரு செம்பிறைச் சங்க அதிகாரி கொல்லப்பட்டார். அதே நகரத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் இறந்தார் என்று பாசல் கூறினார்.
காஸா நகருக்கு கிழக்கே உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்றபோது, இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக கொல்லப்பட்ட 22 பேரின் உடல்களையும் சிவில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.ம
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்- 75 பாலஸ்தீனர்கள் பலி
4 ஆகஸ்ட் 2025, 8:29 AM