கோலாலம்பூர், ஆக. 4- ரவாங் வட்டாரத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ நேற்று மாலை முழுமையாக அணைக்கப்பட்டது.
பெல்டா சுங்கை புவாயாவில் 60 ஹெக்டர் பரப்பளவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட காட்டுத் தீ மாலை 4.26 மணிக்கு வெற்றிகரமாக அணைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
நேற்று முன்தினம் பண்டார் கமுடா கார்டனில் 53 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது காட்டுத் தீச் சம்பவம் ஏற்பட்ட நிலையில் மாலை 4.28 மணிக்கு தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
புக்கிட் செந்தோசா, ரவாங் மற்றும் பத்து ஆராங் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 12 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மூன்று வாகனங்களுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையின் போது எந்த எந்தவிதமான காயங்களோ அல்லது விபத்துகளோ ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவாங்கில் ஏற்பட்ட காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது
4 ஆகஸ்ட் 2025, 3:47 AM