செர்டாங், ஆக. 4- மதிப்பீட்டு வரியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியைச் சேர்ந்த 773 பேருக்கு குப்பைத் தொட்டிகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) வழங்கியது.
வரிசை வீட்டுப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியை முறையாக மேற்கொள்வதற்கும் தங்களின் கடமையை முறையாக நிறைவேற்றும் சொத்து உரிமையாளர்களைப் பாராட்டும் வகையிலும் 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன என்று ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.
தரை வீடுகளுக்கான மதிப்பீட்டு வரி தற்போது 400 வெள்ளியை எட்டியுள்ளது. அதே சமயம், ஒரு குப்பைத் தொட்டியின் விலை 100 வெள்ளியாக உள்ளது பொது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் வழி தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் வாயிலாக குப்பை அகற்றும் பணிகளை திறனுடன் மேற்கொள்வதற்கும் சொத்து உரிமையாளர்கள் தங்கள் மதிப்பீட்டு வரியை முறையாக செலுத்துவதை உறுதி செய்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று
நேற்று இங்குள்ள புக்கிட் செர்டாங் குடியிருப்பாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
மதிப்பீட்டு வரியை இன்னும் செலுத்தாதவர்கள் வரும் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் அதனை செலுத்தி இந்த சலுகையைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த இலவச குப்பைத் தொட்டிகளை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை என்றும் கையிருப்பு தீரும் வரை மற்றும் முதலில் வருவோருக்கு வாய்ப்பு எனும் கோட்பாட்டின் அடிப்படையில் குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும் என்றும் சுபாங் ஜெயா
மாநகர் மன்ற உறுப்பினர் தே பூன் கியாட் தெரிவித்தார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் தரை வீடுகளில் வசிக்கும் வரி பாக்கி வைத்திராதவர்கள் இந்த சலுகையை பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாவர் என்றார் அவர்.