ஷா ஆலம், ஆக. 2- ஜெராம், ஜாலான் ராஜா அப்துல்லா ஆஃப் ஜாலான் பத்து பாடாவில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கோழி பண்ணை மீது கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எஸ்.) நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.
தங்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிம்மதியைப் பாதிக்கும் அளவுக்கு ஈக்களின் தொல்லை இருப்பது தொடர்பில் உள்ளூர்வாசிகள் செய்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
நோயைக் கொண்டு வரும் ஈக்களால் அசௌகரியம் ஏற்படுவது மட்டுமல்லாமல் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மூலம் நோய்கள் பரவும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இதனைக் கருத்தில் அந்த பண்ணையில் வணிகத்தை நிறுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அங்கிருந்த பல்வேறு உபகரணங்களைப் பறிமுதல் செய்ததோடு பண்ணையின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது என நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து வளாகத்தை முறையாகப் பராமரிக்காத குற்றத்திற்காக 1976 ஆம் ஆண்டு ஊராட்சிச் சட்டத்தின் 74 வது பிரிவின் கீழ் சுகாதாரத் துறை சம்மன் வழங்கியது..
கட்டிடத் திட்டத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த வளாகம் கட்டப்பட்டிருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் வளாக உரிமையாளர் உரிம விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தவறிய காரணத்திற்காக 1974ஆம் ஆண்டு சாலை மற்றும் கட்டிட சட்டத்தின் (சட்டம் 133) மற்றும் 121(1) பிரிவின் கீழ் குற்றப் பதிவு வழங்கப்பட்டது.
இதற்கிடையில், முறையான ஆவணங்கள் இன்றி அந்த பண்ணையில் வேலை செய்து வந்த பத்து வங்காளதேசிகளை மலேசிய குடிநுழைவுத் துறை 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(c) பிரிவின் கீழ் தடுத்து வைத்தது.
ஜெராமில் உள்ள சட்டவிரோத கோழிப் பண்ணையில் அதிரடிச் சோதனை- 10 பேர் கைது
2 ஆகஸ்ட் 2025, 11:06 AM