(ஆர்.ராஜா)
சுபாங், ஆக. 1- சுபாங்ஜெயா எரிவாயு குழாய் பாதை வெடிப்பு விபத்தை தொடர்ந்து அரசாங்கத்துறைகளுக்கு சொந்தமான குறிப்பாக நீரோடை, ஆறு, எரிவாயு மற்றும் மின்சார விணியோக வழி ஒதுக்கு நிலங்களில் குடியிருப்பது மற்றும் பயன்படுத்தும் போது ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கவும், இந்த ஒதுக்கீடு நிலங்கள் கள்ள குடியேறிகளின் சொர்க பூமியாக மாறி வருவது குறித்தும் நிறைய புகார்கள் வருவதை தொடர்ந்து சத்பந்தப்பட்ட துறைகள், அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன.
சுங்கை பூலோ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் தெனாகா நேஷனல் மின் வழித்தடம் நெடுகிலும் உள்ள குடியிருப்புகள் உள்ளிட்ட 148 ஆக்கிரமிப்பை அகற்ற சிலாங்கூர் மாநில வன இலாகா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு வழங்கப்பட்ட வளாகங்களில் 48 குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், கனரக வாகன பழுதுபார்ப்பு மையங்கள், அந்நிய நாட்டினரின் வசிப்பிடங்கள் மற்றும் காய்கறித் தோட்டங்களும் அடங்கும்.
மாநில வன இலாகாவின் இந்த உத்தரவினால் சுபாங், கம்போங் துரோப்பிகனாவில வசித்து வரும் மற்றும் மல்லிகைச் செடி பயிரீடு, வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை
மேற்கொள்ளப் பட்ட இந்த நடவடிக்கையில் மாநில வன இலாகா, சுபாங் ஜெயா மாநகர் மன்றம், பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம், நில மற்றும் கனிமவளத் துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த 120 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக சிலாங்கூர் மாநில வன இலாகாவின் துணை இயக்குநர் முகமது நோர் பிர்டாவுஸ் ரஹிம் கூறினார்.
இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது 47 ஹெகடர் பரப்பளவிலான நிலத்தில் கடப்பட்டுள்ள 148 கட்டுமானங்களை காலி செய்யக் கோரும் உத்தரவு அறிக்கை அங்கு ஒட்டப்பட்டது.
இந்த உத்தரவை மதிக்காத அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக 1985ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில நிலச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப் படுவோருக்கு 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஐந்தாண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார் அவர்.
அந்த குடியிருப்பாளர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை அங்கு குடியிருந்து வருகின்றனர். அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ஐந்து முறை ஆக்கிரமிப்பை காலி செய்யும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துவது, விவேக வாடகைத் திட்டத்தின் கீழ் பூச்சோங்கில் மாற்று குடியிருப்புகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுத்து வந்துள்ளோம். எனினும், அவர்கள் அந்த வாய்ப்புகளை புறக்கணித்து அதே இடத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
மாநில வன இலாகா வெளியிட்டுள்ள இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மதித்து வெளியேறும் அதே வேளையில் மாநில அரச வழங்க வந்துள்ள மாற்று குடியிருப்பு வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்வார்கள் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.