சிரம்பான், ஆகஸ்ட் 1: ஜூலை 28ஆம் தேதி ஜெம்போலில் உள்ள ரொம்பின் பகுதியில் ஆறு வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அச்சிறுவனின் தந்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
36 வயதான அந்நபரை காவலில் வைக்கும் உத்தரவை இன்று பஹாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நோர்ஷஸ்வானி இஷாக் பிறப்பித்ததாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோர்ஹிஷாம் முஸ்தபார் தெரிவித்தார்.
ஜோகூரில் உள்ள இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தாமான் புக்கிட் இண்டா பகுதியில் தனது மகன் காணாமல் போனதாகக் கூறி ஜூலை 24ஆம் தேதி அந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.
ஜூலை 23ஆம் தேதி மாலை 4 மணியளவில் சந்தேக நபர் உணவு வாங்க சென்றபோது காரில் தனியாக இருந்த சிறுவன காணாமல் போனதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
பின்னர், ஜூலை 28ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில், ஜெம்போலில் உள்ள ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் அச்சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா