வாஷிங்டன், ஜூலை 31- இந்தியாவுக்கு, 25 விழுக்காடு வரியை விதிப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கு காரணம் இந்தியா நட்பு நாடாக இருந்தாலும் பல ஆண்டுகளாகவே அமெரிக்காவுடனான அதன் வாணிபம் குறைவாகவே உள்ளது.
தற்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஏராளமான பொருட்களை வாங்குகிறது. குறிப்பாக, யுக்ரேனில் போரை நிறுத்த உலக நாடுகளே முனையும் நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து இராணுவத் தளவாடங்களையும் எரிசக்தியையும் இந்தியா வாங்குகிறது.
"எனவே, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஓர் அபராதமாக இந்தியப் பொருட்களுக்கு 25 விழுக்காட்டு வரியை விதிக்கிறேன். ஆகஸ்ட் 1 முதல் இது அமுலுக்கு வரும்" என தனது Truth Social சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்.
ட்ரம்பின் இந்த 25 விழுக்காடு வரி விதிப்பு, இந்தியா-அமெரிக்கா இடையே மாதக்கணக்கில் நடைபெற்ற பல கட்ட வாணிப பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.