ஷா ஆலம், ஜூலை 31 எதிர்வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை 6.50 மணிக்கு டிரம்புடனான தொலைபேசி உரையாடலின் போது அவரது வருகை உறுதி செய்யப்பட்டதாக ஆசியான் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று 13வது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.
இதனிடையே, இந்த அழைப்பின் போது புதிய வரி விகிதத்தை அறிவிப்பதை ஒத்திவைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.
நான் அளித்த பல விளக்கங்களைத் தொடர்ந்து அவர் (டிரம்ப்) அடுத்த நாள் வெளியிடப்படவிருந்த வரி விகித அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்தார்.
இந்த அறிவிப்பு நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக இருக்கக்கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
நாளை ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 விழுக்காடு இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்கா முன்னதாக முடிவு செய்ததிருந்தது.
அதே நேரத்தில் கடந்த திங்களன்று தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக பிரதமரை டிரம்ப் பாராட்டினார்.