கோலாலம்பூர், ஜூலை 31 — சிறப்பான நிதி நிர்வாகத்தை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்கம் தனது புதிய கடன்களை கணிசமான அளவு குறைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 9,940 கோடி வெள்ளியாக இருந்த கடன் தொகை கடந்தாண்டு 7,680 கோடி வெள்ளியாகக் குறைத்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் 13வது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்த அன்வார், நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் உரிய பலனை அளித்துள்ளதாகக் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நாங்கள் நாட்டின் கடனை 9,260 கோடி வெள்ளியாகவும் 2024 ஆம் ஆண்டில் 7,680 கோடி வெள்ளியாகவும் குறைத்தோம்.
சிலர் (தேசிய) கடன் குறித்து இன்னும் குழப்பத்தில் உள்ளனர். வட்டி உட்பட நாம் பெற்ற மொத்த கடனையும் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது அரசாங்கக் கடனைக் குறைப்பதாகும். மேலும் அதனை 9,909 கோடி வெள்ளியிலிருந்து 7,600 கோடி வெள்ளியாக குறைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
நிதிப் பற்றாக்குறை நிலையான கீழ்நோக்கிய போக்கில் இருக்கும் வேளையில் கடந்த 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 விழுக்காடாகவும் 2023 இல் 5 விழுக்காடாகவும் கடந்தாண்டு 4.1 விழுக்காடாகவும் பற்றாக்குறை சுருங்கியுள்ளது என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையை 3.8 விழுக்காடாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.