நிபோங் திபால், ஜூலை 31- இங்கு சுங்கை பாக்காப்பில் உள்ள ஒரு கிடங்கின் மரப்பேலட்டுகள் சேமிப்புப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேல் பிடித்தது.
நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கிடங்கில் தீ ஏற்பட்டது தொடர்பில் அதிகாலை 3.17 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகப் பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
தீயணைப்பு வண்டியில் சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பாக்காப் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 56 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மரப் பேலட்டுகள் சேமிப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டனர் என அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் அருகிலுள்ள கிடங்கு பகுதிக்கு தீ பரவுவதற்கு முன்பு கட்டுப்படுத்தினர்.
மேலும், தீ மறுபடியும் பரவாமல் தடுக்க தீயணைப்புத் துறை தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் அருகிலுள்ள தன்னார்வ தீயணைப்புத் துறையும் உதவி வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 11.46 மணிக்கு தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்ட வேளையில் மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாலை 5.28 மணிக்கு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்தது என்று அவர் கூறினார்.
தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணியில் சுங்கை பக்காப், நிபோங் திபால், பண்டார் பெர்டா மற்றும் கப்பளா பாத்தாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது.