புத்ரஜெயா, ஜூலை 31 - பயணிகள் போல் நடித்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) இரண்டாம் முனையம் வழியாக நாட்டிற்குள் நுழைய 13 வெளிநாட்டினர் மேற்கொண்ட முயற்சியை எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் (ஏ.கே.பி.எஸ்.) கண்காணிப்புப் பிரிவு நேற்று வெற்றிகரமாக முறியடித்தது.
ஒரு பெண் உள்ளிட்ட ஒன்பது இந்தியப் பிரஜைகள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்களே தடுத்து நிறுத்தப்பட்ட அந்நிய நாட்டினர் ஆவர் என்று ஏ.கே.பி.எஸ். ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
குடிநுழைவுத் துறை செயல்பாட்டு அலுவலகத்தில் தொடர் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்ட பின்னரும் அவர்கள் சோதனைத் தடத்தில் மீண்டும் நுழைய முயன்றது கண்டறியப்பட்டதாக அது குறிப்பிட்டது.
சோதனை செய்யப்பட்ட 270 வெளிநாட்டினரில் அவர்களும் அந்த 13 பேரும் அடங்குவர். அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் அவர்கள் டிரான்சிட் பகுதியில் உடைகளை மாற்றிக்கொண்டு புதிதாக வந்த பயணிகளைப் போல நடித்ததாகக் கூறப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணுக்கமான கண்காணிப்பு மற்றும் ஏ.கே.பி.எஸ். குழுவின் செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக இந்த கபட நாடகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
வெளிநாட்டினர் குடிநுழைவுத் துறையின் கட்டுப்பாட்டுப் பகுதியை கடந்து செல்வதற்கு முன்பு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்டறிந்து விரைவாகச் செயல்பட்டனர்.