பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31: சுங்கை பூலோ வனப்பகுதியில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின் (PATI) குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை குடிநுழைவு துறை சோதனை நடத்தியது.
அக்குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்ததாகவும், உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை அந்நியர்களுக்கு RM300 என்ற மிகக் குறைந்த வாடகைக்கு விட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது,
இந்த சட்டவிரோத குடியேறிகள் சோதனை நடவடிக்கை நில உரிமையாளர் மாநில வனத்துறை தலைமையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்பட்டது என சிலாங்கூர் குடிநுழைவுத் துறை (JIM) செயல் பாட்டுத் தலைவர் முகமட் அஸ்ருல் ஹஸ்ட்லிசான் சகாரியா கூறினார்.
"மொத்தம் 120 சட்டவிரோதக் குடியேறிகள் சோதனை செய்யப்பட்டு, 104 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இந்தோனேசியர்கள் (30) , வங்கதேசிகள் (39), இந்தியர்கள் (23), மியான்மர் (6), பாகிஸ்தானியர்கள் மற்றும் நேபாளிகள் தலா மூன்று பேர் அடங்குவர்.
"செல்லுபடியான அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்ததற்காகவும், குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1)(c) மற்றும் பிரிவு 15 (1)(c) இன் கீழ் காலாவதியான தேதிக்கு பிறகு தங்கியிருந்த குற்றத்துக்காகவும் அவர்கள் செமினி தடுப்புக் காவல் பணியகத்திற்கு அனுப்பப் பட்டனர்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது,.கைவிடப்பட்ட ஒரு முன்னாள் மறுவாழ்வு மையம் அன்னியர்களுக்கு வாடகை விடப் பட்டதையும், அவர்கள் அந்த வீட்டிற்கு சட்டவிரோதமாக நீர் மற்றும் மின்சார இணைப்பையும் ஏற்படுத்தியிருப்பதை அமலாக்க அதிகாரிகளின் சோதனை அம்பலப்படுத்தியது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான அந்த தனியார் மறுவாழ்வு மையம் சட்டவிரோத நிலத்தில் இயங்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. தற்போது அவ்விடத்தில் ஒரு அறை RM800 விலையில் வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடப்படுகிறது என்று அறியப்படுகிறது.
அனைத்து வெளிநாட்டினரும் விசாரணைக்காக இரண்டு வாரங்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்படும் அல்லது குடிநுழைவுத் துறை மற்றும் தூதரகத்துடன் கூட்டு செயல்முறை மூலம் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் முகமட் அஸ்ருல் கூறினார்.
இதற்கிடையில், சுங்கை பூலோ வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக தனது துறை நம்புவதாக மாநில வனத்துறை இயக்குநர் அசார் அகமட் கூறினார்.
வனப்பகுதிக்கான வர்த்தமானி நீக்க செயல்முறை சமீபத்தில் தொடங்கியபோதுதான் இந்த ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
"20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் அருகிலுள்ள ஒரு காண்டோமினியத்தில் பாதுகாப்புக் காவலர்களாகவும், தொழில்துறை பகுதி மற்றும் விவசாய பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டு அந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாக இங்கு இருக்கிறார்கள் என தெரிகிறது. ஆக கடைசியாக 2015 ம் ஆண்டு முத்திரையுடன் கூடிய பாஸ் போர்ட்களைக் கொண்ட வெளி நாட்டினரும் அங்கு வாழ்பவரில் அடங்குவர்," என்று அவர் கூறினார்.
பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 150 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை சுமூகமாக நடந்ததாகவும், சுங்கை பூலோ வனப்பகுதியில் இப் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும் வரை அவ்வப்போது இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் அசார் விளக்கினார்.