கூச்சிங், ஜூலை 30 - கல்வித் தேவை, நிச்சயமற்ற பொருளாதார நிலை, அதிகப்படியான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் குடும்ப அமைப்பு முறையில் ஏற்படும் பிளவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளைஞர்களிடையே மனநல பாதிப்பு அதிகரித்து வருவதாக சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.
மனநலச் சேவை குறைவாக உள்ள பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் இந்நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் கூறினார்.
நகர்ப்புறங்களில் இருந்தபோதிலும் பல இளைஞர்களால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அல்லது வெளிப்படுத்துவதற்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை இன்னும் பெற முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கல்வி முறை, தொழில்நுட்பம், சமூக விதிமுறைகள், குடும்பம் மற்றும் தற்போதுள்ள கொள்கைகள் போன்ற வெளிப்புற காரணங்களால் இளைஞர்களின் மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதால் இது முக்கியமானது. இளைஞர்களின் தேவைகளை மிகவும் திறம்பட ஆதரிக்க இந்த அமைப்பு முறையை நாம் மீண்டும் சரிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இனியும் நாம் அமைதியாக இருக்க முடியாது. இளைஞர்களை வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்க வேண்டும். மேலும், நெருக்கடிகளின் போது மட்டுமல்லாது முன்கூட்டியே மற்றும் தொடர்ச்சியாக சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் மற்றும் திறன்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சரவாக்கில் நடைபெற்ற இளைஞர் மனநலம் குறித்த 2025 அனைத்துலக மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அப்துல் கரீம் இவ்வாறு தெரிவித்தார்.