மூவார், ஜூலை 27- அண்மையில் அறிவிக்கப்பட்ட லிட்டர் ஒன்றுக்கு வெ.1.99 என்ற ரோன் 95 மானிய விலை பெட்ரோல் மலேசியர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. அதே சமயம் அந்நிய நாட்டினருக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் மடாணி அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு ஏற்ப அரசாங்கம் வழங்கும் மிகப்பெரிய உதவித் தொகையை நாட்டு மக்கள் மட்டுமே அனுபவிப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ரோன் 95 மானிய விலை பெட்ரோல் மலேசியர்களுக்கானது. அதனை லிட்டர் ஒன்றுக்கு வெ.1.99 என்ற விலையில் விற்பது. அதே சமயம், சிங்கப்பூரர்கள் உள்பட வெளிநாட்டினர் வெ.2.50 அல்லது வெ.2.60 என்ற சந்தை விலையில் வாங்க வேண்டும். இது பாகுபாடு கிடையாது. மக்களின் நலன் காக்கும் இறையாண்மைக் கொண்ட நாட்டின் கொள்கை இதுவாகும் என அவர் கூறினார்.
இங்குள்ள டத்தாரான் தஞ்சோங் இமாசில் 2025 தேசிய கொடியை பறக்கவிடும் இயக்கத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
வரி செலுத்தாத மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி பங்களிப்பை வழங்காத அந்நிய நாட்டினரும் இதுநாள் வரை அனுபவித்து வந்த சலுகையால் நாட்டிற்கு ஏற்பட்ட செலவினத்தையும் இந்த நடவடிக்கையின் வழி குறைக்க இயலும் என்றார் அவர்.
பெட்ரோலுக்கான மானியம் மலேசியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதை குறை கூறிய ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் அறிக்கையையும் பிரதமர் கடுமையாகச் சாடினார்.
அந்நிய நாட்டினர் ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். ஏன் என்று எனக்கு விளங்கவில்லை என்று அவர் சொன்னார்.
நம்மைப் போல் வெளிநாட்டின வரி செலுத்துவதில்லை. வேறு எந்த நாட்டில் சொந்த நாட்டு மக்களைப் போல் பிற நாட்டினரும் சலுகைகைய அனுபவிக்கின்றனர்? மலேசிய மக்களின் நலன் காப்பது எனது தலையாயப் பொறுப்பு என பிரதமர் குறிப்பிட்டார்.