பாங்கி, ஜூலை 27- சாலைப் போக்குவரத்து துறையால் பட்டியலிடப்பட்ட 28 சரக்கு வாகன நிறுவனங்கள் மற்றும் விரைவு பேருந்து நடத்துநர்கள் நிலுவையில் வைத்திருந்த 34,371 குற்றப்பதிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தீர்வு காண பட்டதைத் தொடர்ந்து சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) 62 லட்சம் வெள்ளியை வசூலித்தது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இரண்டு வார கால அவகாசத்தை அறிவித்த பிறகு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஒரு தீர்வைக் காண்பதற்காக சாலை போக்குவரத்து இலாகாவை தொடர்பு கொண்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
ஆகவே ஜே.பி.ஜே மட்டத்தில் சமீபத்திய குற்றப்பதிவுகள் வெளியிடவும் அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கான வழிவகைகள் காணவும் நாங்கள் உதவுகிறோம். உண்மையில் அனைத்து நிறுவனங்களும் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை தீர்க்க விரும்புவதை நாங்கள் காண்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி என அவர் தெரிவித்தார்
இன்று இங்குள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழக விளையாட்டு மையத்தில் ஜே.பி.ஜே. குடும்ப தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இருப்பினும், இன்னும் பல நிறுவனங்கள் தங்கள் சம்மன்களை இன்னும் தீர்க்கவில்லை எனக் கூறிய அவர், அபராதத்தை செலுத்த ஜூலை 9 முதல் ஒரு மாத கால அவகாசத்தை ஜே.பி.ஜே.வழங்கியுள்ளது என்றார்.
குற்றப்பதிவு களுக்கு தீர்வு காண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கீழ் உள்ள வாகனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு எந்த பதிலும் வழங்காத காரணத்தால் நாங்கள் ஏற்கனவே சில வாகனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க தொடங்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (அவாஸ்) சம்மன்கள் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் வழங்கப்படும் 150 வெள்ளி சிறப்பு சம்மன் சலுகை குறித்து கருத்துரைத்த அவர், இது சரக்கு மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறினார்.