பூச்சோங் ஜூலை 27 ; - இன்று காலை ஜூலை 27, சிலாங்கூர் பூச்சோங் 14 வது மைலில் கபடி விளையாட்டுக்கு தனி விளையாட்டு மையத்தை திறந்து வைத்து ஒரு சரித்திர நிகழ்வுக்கு வித்திட்டார் சுபாங் ஜெயா மாநகராட்சி தலைவர் டத்தோ பண்டார் டத்தோ அமிருள் அசிசான். இது மலேசியாவில் அரசாங்க அங்கீகாரத்துடன் அரசாங்க நிலத்தில் நிறுவப்பட்ட முதல் கபடி விளையாட்டு மைதானம் மட்டுமின்றி சுமார் 4 லட்சம் செலவில் மேற்கூரை ஆடை மாற்றும் அறைகள் கழிவறைகளுடன் கட்டுவதற்கு அடி கல்லாக விளங்கும் வண்ணம் விளையாட்டு மைதானத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
நெடுங்காலமாக தோட்டப்புற மற்றும் கிராமப்புற சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே விளையாட்டாளர்கள் மைதானங்களை அமைத்துக் கொண்டு விளையாடியது உண்டு. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு தனி ஒரு மைதானம் இல்லை என்ற அதிர்ச்சிக்கு விடை காண புறப்பட்டுள்ளார் சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் பரிதிவாணன். .
அவரின் நன் முயற்சியால் புதிய விளையாட்டு தளம் இன்று இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பின் யீன், புக்கிட் பூச்சோங் தலைமை போலீஸ் அதிகாரி திரு விக்னேஸ்வரன். சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் கபடி சங்க உறுப்பினர்கள் திரளாக கபடி விளையாட்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்நிலையில் சுபாங் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ அமிருள் அசிசான் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.