ஷா ஆலம், ஜூலை 27- சிலாங்கூர் மாநில விவசாயத் துறையினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 சிலாங்கூர் வேளாண் பசுமை நிகழ்வில்
10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த மூன்று நாள் நிகழ்வு செராஸ் தாமான் புளோராவில் நடைபெறும்
என்று விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
முன்பு வாடிக்கையாளர் சந்திப்பு தினம் என அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு
மாநிலத்தின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உணவுப் பொருள்
துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எடுத்துக்காட்டும் தளமாக விளங்கும்
வகையில் புதிய தோற்றம் கண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த புதிய அணுகுமுறையின் வழி உயர் மதிப்பிலான விவசாயம், நவீன
தொழிநுட்பம், வேளாண் சுற்றுலா மற்றும் சிலாங்கூர் உணவு விநியோகச்
சங்கிலியை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை விரிவுபடுத்த இயலும்
என்று நேற்று இங்கு 2025 சிலாங்கூர் வேளாண் பசுமை திட்டத்தை
தொடக்கி வைத்த போது அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளை நாங்கள் இட வசதி கருதி
பேரங்காடிகளில் நடத்தி வந்தோம். ஆயினும், இம்முறை பசுமை வேளாண்
கோட்பாட்டிற்கு ஏற்ப மேலும் கவர்ச்சிகரமான இடத்தை தேர்வு
செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டம் வெளி பங்காளிப்பாளர்களுக்கு விழிப்புணர்வையும்
சிலாங்கூரில் உள்ள இளம் தொழில்முனைவோரின் முயற்சிகள் பற்றிய
விழிப்புணர்வையும் இந்த திட்டம் வெளிக்கொணரும் என்றார் அவர்.
கூடுதலாக, இந்த நிகழ்வில் வர்த்தக இணை அமர்வுகளும் நடத்தப்படும்.
தொழில்துறையினருக்கிடையே வியூக கூட்டாண்மை ஏற்படுவதற்குரிய
வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். மேலும் விவசாயப் பொருள்கள் சிறப்பு
விலையில் விற்கப்படுவது இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக விளங்கும்
என்று அவர் தெரிவித்தார்.