ஷா ஆலம், ஜூலை 27- தலைநகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி அமைதியான முறையில் நடைபெற்றது நாட்டில் ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும் கருத்துகளை வெளியிடும் உரிமையை அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குவதில் மடாணி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையும் புலப்படுத்துகிறது.
பாஸ் கட்சியின் ஏற்பாட்டிலான இந்த பேரணியை ஒரு அச்சுறுத்தலாக கருத முடியாது. இரும்புப் பிடியிலிருந்த முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அரசியல் கலாசாரம் வெளிப்படையானதாக மாறி வருவதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஆடாம் அட்லி கூறினார்.
மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட, பேரணியில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்ட மற்றும் கருத்து வேற்றுமை குற்றமாக கருதப்பட்ட காலத்தை மலேசியா கடந்து வந்துள்ளது.
ஆனால், மடாணி யுகத்தில் எந்த இடையூறுமின்றி அமைதியான முறையில் ஒன்று கூட எதிர்க்கட்சியினருக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது பலவீனமான நிர்வாகத்தின் அடையாளம் அல்ல, மாறாக, உண்மையான ஜனநாயகத்தின் சக்தி என அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள படி ஒன்று கூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உத்தரவாதம் அளிக்கும் அதே வேளையில் மடாணி அரசாங்கம் ஆரோக்கியமான மற்றும் சமநிலையான ஜனநாயகத்தை ஒரு கலாசாரமாகவும் ஆக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த பேரணி குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட நேர்மறையான கருத்து ஆணவத்தின் அடிப்படையில் அல்லது அடக்குமுறையின் வாயிலாக அல்லாமல் மக்களின் குரலை காது கொடுத்து கேட்க அரசாங்கம் தயாராக உள்ளதை காட்டுகிறது என்றார் அவர்.