ஷா ஆலம், ஜூலை 27- தலைநகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட் பேரணி
அமைதியாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்த அனைத்து
அமலாக்க பணியாளர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த பேரணியின் போது பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை
உறுதி செய்வதில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர்
மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உயர்ந்த பட்ச
கட்டொழுங்கையும் அர்ப்பண உணர்வையும் வெளிப்படுத்தியதாக அவர்
குறிப்பிட்டார்.
தங்களின் கருத்துகளை வெளியிடவும் ஒருமைப்பாட்டை உணர்வை
வெளிப்படுத்தவும் வெளியூர்களிலிருந்து கூட வந்த சகோதர சகோதரிகள்
பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு தங்கள் வீடுகளை சென்றடையுமாறு
கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் அவர்
தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை
முன்வைப்பதற்கான உரிமை உள்பட ஜனநாயக நடைமுறையைப்
போற்றிக் காப்பதில் தமக்குள்ள கடப்பாட்டை அன்வார் அந்த அறிக்கையில்
உறுதிப்படுத்தினார்.
விமர்சனங்களையும் கருத்து வேற்றுமைகளையும் பகைமைக்
கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக,
முதிர்ச்சியடைந்த, முற்போக்கான மற்றும் இறையாண்மைக் கொண்ட
தேசத்தின் உயிர்நாடியாக அது போற்றிக் காக்கப்பட வேண்டும் என
அஅவர் வலியுறுத்தினார்.
நாம் நேசிக்கும் நாட்டின் உணர்வுக்கு ஏற்ப இத்தகைய பேரணிகள்
அமைதியாகவும் கட்டொழுங்குடனும் நடைபெறுவதுதான் முக்கியம்
என்றார் அவர்.