பாரிஸ், ஜூலை 25 - எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய
நாடுகள் சபையின் 80வது பொதுப் பேரவையில் பாலஸ்தீன நாட்டை
பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளதாக அந்நாட்டின் அதிபர்
இமேனுவல் மேக்ரோன் கூறினார்.
அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்கு ஏதுவாக காஸாவில் உடனடிப் போர்
நிறுத்தம் அமல்படுத்தப்படுவது தற்போதைய மிக முக்கியத் தேவையாகும்
என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதாக ஷின்ஹுவா செய்தி
நிறுவனம் தெரிவித்தது.
உடனடிப் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவது, கைதிகளை விடுவிப்பது மற்றும் காஸா மக்களுக்கு மிகப்பெரிய அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிப்பதற்கு பின்னால் இருக்கும் தொலைநோக்குத் திட்டத்தை விவரித்த மேக்ரோன், பாலஸ்தீன நாட்டை
உருவாக்கி அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே, பாலஸ்தீன மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி
செய்யவும் பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வரவும் இரு நாடுகளுக்கிடையிலான தீர்வே ஒரே வழியாகும் என்று பாலஸ்தீன
அதிபர் மாமுட் அப்பாஸுக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் அவர்
மேக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நியுயார்க்கில் நடைபெற்ற பாலஸ்தீனம் மீதான
அனைத்துலக மாநாட்டின் போது பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ்
அங்கீகரிக்கும் என்று மேக்ரோன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.