ad
MEDIA STATEMENT

வெ.100 உதவித் தொகை- தேசிய தின உணர்வுக்கு அடையாளம்-  பாப்பாராய்டு கருத்து

24 ஜூலை 2025, 12:29 PM
வெ.100 உதவித் தொகை- தேசிய தின உணர்வுக்கு அடையாளம்-  பாப்பாராய்டு கருத்து

ஷா ஆலம், ஜூலை 24- பதினெட்டு வயதுக்கும்  மேற்பட்ட ஒவ்வொரு  குடிமகனுக்கும் 100 வெள்ளி உதவி என்ற பிரதமரின் அறிவிப்பு சுதந்திர உணர்விற்கும், மக்களின் நலனை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த  உதவி நிதி,  மக்கள், குறிப்பாக இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்ப்பதில் அடையாளமாகக் கருதப்படுவதோடு  மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் உதவும் என்று  வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.

ஒருவேளை சிலர் ஏன் 100 வெள்ளி  என்று கேள்வி எழுப்பலாம். என்னைப் பொறுத்தவரை இது தேசிய தினத்தைக் கொண்டாடுவதற்கு  இளைஞர்களுக்கு (குறிப்பாக) ஒரு  வெகுமதியாக (குறியீடாக)  விளங்குவதோடு (மலேசியா தினத்திற்கு) கூடுதல் விடுப்பையும் வழங்குகிறது  என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள  600  சட்டமன்றத் தொகுதிகளில்    ரஹ்மா மடாணி மலிவு விற்பனைத்  திட்டத்தின்  எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை  பி40 தரப்பினர்  குறைந்த விலையில் அடிப்படைப் பொருட்களைப் பெறவும்  உதவும் என்று அவர் கூறினார்.

ரஹ்மா விற்பனை பி40 தரப்பினருக்கு  அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவுகிறது. இந்த உதவி ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் இதர தேவைகளுக்கும்  உண்டாகும் செலவை  மிச்சப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

ரோன்95 பெட்ரோலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு வெ.1.99 ஆகக் குறைப்பது குறித்து கருத்துரைத்த அவர், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அரசாங்கம் கொண்டுள்ள  அக்கறையைக்  இது காட்டுகிறது என்றார்.

இந்தப் பிராந்தியத்தில்  மலிவான பெட்ரோல் விற்பனையைக் கொண்ட நாடு நாம் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் டீசல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.  பெட்ரோல் விலை குறைப்பு  குறித்த அறிவிப்பு மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகிறது என்று பாப்பாராய்டு  கூறினார்.

நேற்று, பிரதமர் அன்வார் பல முன்னெடுப்புகளை அறிவித்தார். அதில்  ஒரு முறை மட்டுமே வழங்கக்கூடிய 100 வெள்ளி ரொக்க வெகுமதி ,  செப்டம்பர் 15 அன்று நாடு தழுவிய பொது விடுமுறை, மற்றும் ரோன்95 பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவை அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.