கிள்ளான், ஜூலை 23- இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் மற்றும் மருத்துவ வாயு விநியோக முறை மீதான ஆய்வு உள்பட விரிவான பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிவப்பு மண்டலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சிறிய அளவிலான தீவிபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கூறியது.
மாலை 5.05 மணிக்கு ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அணைத்து விட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வதற்காக மின் கம்பி இணைப்பு, மருத்துவ வாயு விநியோகக் குழாய்கள் மற்றும் சுவிட்ச் உள்ளிட்டவை மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அத்துறை தெரிவித்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்தில் 126 நோயாளிகளும் 62 மருத்துவப் பணியாளர்களும் இருந்தனர். எனினும், எந்த உயிருடச் சேதமும் ஏற்பவில்லை. அனைத்து நோயாளிகளும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனை வழக்கம் போல் செயல்படுவதால் அதன் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அத்துறை மேலும் கூறியது.
மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தாங்கள் உத்தரவாதம் வழங்கப்படும் எனக் கூறிய அத்துறை, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தது.