கோலாலம்பூர், ஜூலை 23 - நாடு முழுவதும் உள்ள 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் சுமார் 941,000 நெடுஞ்சாலை பயனாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு தினசரி நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கூறியது போல் முந்தைய நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படி சம்பந்தப்பட்ட 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இந்த ஆண்டு அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை மடாணி அரசாங்கம் முழுமையாகப் புரிந்துகொள்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த உறுதிமொழியை மதிக்கும் வகையில் தடையற்ற நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான, நன்கு பராமரிக்கப்படும் உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காக, நிதி அமைச்சின் மூலம் அரசாங்கம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு 50 கோடி வெள்ளிக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்கும் என்று நந்தா கூறினார்.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், ஆழ்ந்த சிந்தனையுடனும் பொறுப்பான அணுகுமுறையுடனும் மேற்கொள்ளப்பட்டது என நந்தா குறிப்பிட்டார்.
முன்னதாக, பத்து நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வை ஒத்திவைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இதனால் பயனர்கள் தற்போதைய கட்டணங்களை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என அவர் கூறினார்.