ஷா ஆலம், ஜூலை 23- கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில்
நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் இணைப்பு சாக்கேட்டில்
உண்டான இந்த தீயின் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும்
பதற்றம் ஏற்பட்டதோடு நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து
வெளியேற்றப்பட்டனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட இத்தீவிபத்தில் யாருக்கும்
ஏற்படவில்லை என்பதோடு பெரிய அளவில் சேதமும் உண்டாகவில்லை
என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்
கூறினார்.
இந்த தீவிபத்து தொடர்பில் மாலை 5.13 மணிக்கு தங்களுக்கு தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து ஏழு உறுப்பினர்கள் அடங்கிய தீயணைப்புக் குழு
சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மருத்துவமனையின் அவசர
சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில் உள்ள மின் இணைப்பு சாக்கெட்
மட்டுமே இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது என அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே
மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைத்து விட்டதாகக் கூறிய அவர்,
சேதத்தின் அளவு சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே என தெரிவித்தார்.