ஷா ஆலம், ஜூலை 23- சிலாங்கூர் ஏற்று நடத்தவிருக்கும் 2026 மலேசிய விளையாட்டுப் போட்டி ( சுக்மா) அடுத்தாண்டு ஆகஸ்டு மாதம் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ள வேளையில் அதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடத்தில் (எஸ்.ஐ.சி.) நடைபெறவுள்ளது.
அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா சுக்மா போட்டியை செப்டம்பர் 5 முதல் 14 வரை நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மொத்தம் 28 நிரந்தர விளையாட்டுகளும் ஐந்து கூடுதல் விளையாட்டுகளும் இப்போட்டியில் இடம் பெறவுள்ளன. இந்த சுக்மா போட்டியின் தொடக்க விழா எஸ்.ஐ.சி. தடத்திலும் நிறைவு விழா பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் திடலிலும் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
இந்த போட்டிக்கான சின்னம், மாஸ்கோட் எனப்படும் பொம்மை வடிவம், கருப்பொருள் ஆகியவற்றின் அறிமுக நிகழ்வு இம்மாதம் 15ஆம் தேதி ஷா ஆலம் செக்சன் 7, டேவான் ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சுக்மா போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சுக்மா 2026 விளையாட்டுப் போட்டிகள் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்கள் மற்றும் 12 ஊராட்சி மன்றங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் எனக் கூறிய அவர், எனினும் தடகள சைக்கிளோட்டப் போட்டி மட்டும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாயில் உள்ள தேசிய வேலேடரோமில் நடத்தப்படும் என்றார்.
இந்த போட்டியில் பதினைந்து மாநிலங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு சிறப்பு அழைப்பின் பேரில் புருணை குழுவும் பங்கேற்கும் என்றார் அவர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் அணிக்கு கூடுதல் நிதி வழங்கப்படுவது குறித்து வினவப்பட்ட போது மாநில விளையாட்டு மன்றத்தின் மறுமொழியைப் பொறுத்து இது அமையும் என்று அவர் பதிலளித்தார்.